5 கோடியே 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட மூன்று தாய்லாந்து நாட்டவர்கள் இன்று (15) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதுடைய இருவரும், 33 வயதுடைய ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று (15) அதிகாலை 12.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து, தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டுவந்த மூன்று பயணப் பைகளையும் சோதனையிட்ட அதிகாரிகள், அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களுக்குள் மிக நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 96 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
