குருக்கள்மடத்தில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இறுதிநாள் நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை (14) நிறைவடைந்துள்ளன. இதன்போது, வெட்டுக்காயங்களுடன் கூடிய மனித எச்சங்கள், மண்டையோடு உள்ளிட்ட எலும்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்துள்ளார்.
குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள், களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, கடந்த 6.10.2026 முதல் 14.10.2026 வரை ஒன்பது நாட்களாக முன்னெடுக்கப்பட்டன.
இந்த அகழ்வுப் பணிகளின்போது, மனித எச்சங்களாக இருக்கலாம் என நம்பப்படும் பல பொருட்களும், மண்டையோடு உள்ளிட்ட எலும்புத் தொகுதிகளும் வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாகச் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மேலதிக பகுப்பாய்வுகளுக்காகச் சட்ட வைத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்றிரவு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், குறித்த அகழ்வுப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையும் சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கையும் கிடைக்கப்பெற்ற பின்னரே, இந்தப் புதைகுழி தொடர்பான முழுமையான விபரங்களை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
