தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (14) இரவு மாடு ஒன்றைக் கடத்திச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. எனினும், அந்த மாடு கடுமையாகக் காயமடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாட்டை இறைச்சிக்காகக் கடத்திச் செல்லும் நோக்கில், அதன் பின்னங்கால்கள் இரண்டும் வெட்டப்பட்டதுடன், வயிற்றுப் பகுதியில் மரக்கட்டை ஒன்றைச் செலுத்தியும் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, காயமடைந்த மாடு அங்கேயே கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, ரயில்வே ஊழியர்களும் அப்பகுதி மக்களும் ஒன்றிணைந்து, காயமடைந்த மாட்டைப் பராமரிப்பதற்காகத் தற்காலிகக் கொட்டகை ஒன்றை அமைத்துள்ளனர்.
தியத்தலாவை கால்நடை வைத்தியர் அங்கு சென்று மாட்டுக்குச் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தியத்தலாவை நகரப் பகுதியில் சுதந்திரமாக நடமாடும் மாடுகள் இறைச்சிக்காகத் தொடர்ச்சியாகக் கடத்தப்படுவதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சட்டவிரோத விலங்குக் கடத்தல் நடவடிக்கைகளில் சில முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தியத்தலாவை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்காகத் தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கால்நடைகளுக்கு எதிரான இத்தகைய கொடூரச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதுடன், சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
