நாட்டின் கல்வித்துறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தெரிவு நடைமுறைகளில் பாரிய குறைபாடுகளும் முரண்பாடுகளும் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கல்வி முறைமையிலும் ஆசிரியர் நியமனங்களிலும் தொடர்ச்சியாகப் பல்வேறு சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், பாடசாலைகளில் சுமார் 46,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், முதற்கட்டமாக 23,000 ஆசிரியர்களை மாத்திரம் நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்காகக் கோரப்பட்ட 1,29,000 விண்ணப்பங்களுக்கான முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், விண்ணப்பதாரர்கள் பல பாடங்களுக்கு விண்ணப்பித்துள்ளதால், அவர்கள் வெவ்வேறு நேர்முகத் தேர்வுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, சட்டரீதியான சிக்கல்கள் எதுவும் இல்லாத 17,000 பேர் மாத்திரமே எதிர்வரும் ஜனவரி மாதத்தில் முதற்கட்டமாக நியமனம் பெறவுள்ளதாகவும், ஏனையவர்கள் கட்டம் கட்டமாக நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சின் முறையான திட்டமிடலின்மையே மாகாண மற்றும் வலய மட்டங்களில் இத்தகைய குழப்ப நிலைமைகள் ஏற்படுவதற்குக் காரணம் எனத் தெரிவித்த அவர், இவ்வாறான நெருக்கடிகளை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு முன்னரே கவனத்தில் எடுத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று கடந்த மூன்று வருடங்களாக ஆசிரியர் நியமனமின்றி வீடுகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், அவர்களைப் புறக்கணித்துவிட்டு தனியார் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
பணம் செலுத்திப் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக அரச சேவைக்குள் உள்வாங்கப்படும் அதேவேளை, அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று பட்டம் பெற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய நடைமுறைகள் இலவசக் கல்வி முறைமையின் முக்கியத்துவத்தைச் சீரழிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகத் தம்முடன் கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான அணுகுமுறைகளுடன் கல்வித்துறையை முன்னேற்ற முடியாது எனத் தெரிவித்த அவர், நாட்டின் மனித வளங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கம் முறையான தீர்வுகளை முன்வைக்காமல் இப்பிரச்சினைகளைத் தட்டிக்கழித்து வருவது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.
