இலங்கை விரும்பும் பொருத்தமான எந்தவொரு வழியிலும் தொடர்ந்து ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக இருப்பதாக அதன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் பெங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தின்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையின் பேரண்டப் பொருளாதார நிலைமை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், நாட்டின் நிதிச் செயல்திறன் வலுவடைந்துள்ளதுடன், கடன் மறுசீரமைப்புப் பணிகளும் பெருமளவில் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், நல்லாட்சி உள்ளிட்ட கட்டமைப்பு சார்ந்த முக்கிய விடயங்களிலும் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாத முற்பகுதியில், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் (Extended Fund Facility) கீழ் ஏழாவது மீளாய்வு தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த மீளாய்வு நிறைவடைந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதல் கிடைத்த பின்னர், இலங்கை சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையான சிறப்பு வரைபட உரிமைகளை (Special Drawing Rights – SDR) பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணக்கப்பாடு எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சொனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்தார். மேலும், தற்போதைய திட்டம் மார்ச் மாதத்தில் நிறைவடைவதற்கு முன்னர், அடுத்தகட்ட மீளாய்வுக்காக சர்வதேச நாணய நிதியக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விணக்கப்பாட்டுக்கு அப்பாலும், இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைந்து செயற்பட சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். புதிய நிதி ஏற்பாடு, பொருளாதாரக் கண்காணிப்பு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் கொள்கை ஆலோசனைகளை வழங்குவது போன்ற வழிகளிலும் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
