காணாமல்போனோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (16) காலை அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, பல தசாப்தங்களாகத் தமது உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களின் பரிதவிப்பும், காணாமல்போனோர் அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் தற்போதைய நிலைமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
“1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர் அதன் பின்னர் திரும்பி வரவில்லை. அவரைக் கண்டுபிடிக்கும் வரை நாங்களும் பல இடங்களிலும் தேடித் திரிகிறோம். எந்தவொரு முடிவும் கிடைக்காமல் 36 வருடங்களாக எனது கணவரைக் காணவில்லை” எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் துயரத்துடன் தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர், சட்டத்தரணி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, தமது அலுவலகத்திடம் சுமார் 25,000 பேரை உள்ளடக்கிய காணாமலாக்கப்பட்டோரின் பட்டியல் இருப்பதாகத் தெரிவித்தார்.
இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், தற்போது 17,000 பேரின் தரவுகள் அலுவலகத்திடம் உள்ளதாகவும், அவர்களில் இதுவரை ஏறக்குறைய 11,000 பேரிடம் முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதற்கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான தொடர் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சில நிறுவனங்களும் தனிநபர்களும், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடமிருந்து மூல ஆவணங்களைச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தனது பணிகளை முன்னெடுக்கும்போது பிறப்புச் சான்றிதழ்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் அல்லது நிழற்படப் பிரதிகளை மாத்திரமே சேகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமது மூல ஆவணங்களை எவரிடமும் வழங்குவதைத் தவிர்க்குமாறு அலுவலகம் கடுமையாக எச்சரித்துள்ளது.
குறித்த நிகழ்வுகள் கல்முனை பிரதேச செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை மற்றும் இன்று வெள்ளிக்கிழமை (16) ஆகிய இரு தினங்களாக இடம்பெற்று வருகின்றன. நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போது தமது குடும்ப உறவுகளை இழந்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
