20.6 C
London
October 1, 2026
இலங்கைகொழும்பு

கொழும்பில் புதிதாக 122 மெட்ரோ பஸ்கள்: யாழ்ப்பாணம், கண்டி, காலி நகரங்களுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை

கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் 122 புதிய மெட்ரோ பஸ் சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலி நகரங்களுக்கும் இச்சேவை விரைவில் விஸ்தரிக்கப்படவுள்ளது.

கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுப் போக்குவரத்து சேவையின் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் விசேட திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தின் 07 வழித்தடங்களை உள்ளடக்கிய வகையில் 122 புதிய மெட்ரோ பஸ்கள் இன்று (29) உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

தலங்கம மெட்ரோ பஸ் டிப்போ வளாகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றதுடன், கொழும்பை மையமாகக் கொண்ட பிரதான வழித்தடங்கள் மற்றும் நேர அட்டவணைகளின்படி இந்த பஸ்கள் இயங்கவுள்ளன.

இத்திட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து விளக்கிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 50 பஸ்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார். 

இந்தப் புதிய பஸ்கள் யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலி ஆகிய முக்கிய நகரங்களை உள்ளடக்கிய நகரங்களுக்கு இடையிலான சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளன. அத்துடன், மெட்ரோ சேவை விஸ்தரிக்கப்படும் போது பிரதான நகரங்களின் நெரிசலைக் கட்டுப்படுத்த நகரப் போக்குவரத்து அனுமதிப்பத்திர முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இத்திட்டத்தில் தனியார் துறையினரை இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நகரப் பகுதிகளுக்குள் தனியார் வாகனங்களின் பிரவேசத்தைக் கட்டுப்படுத்தி, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‘பார்க் அண்ட் ரைட்’  முறையை (Park & Ride system) நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வாகனத் தரிப்பிடங்களை பஸ் நிலையங்களுக்கு அருகில் அமைக்குமாறு அமைச்சர் நகர மேயர்களிடம் கேட்டுக்கொண்டார். 

இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, லங்கா மெட்ரோ ட்ரான்சிட் திட்டத்துக்கு 100 பஸ்களை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மெட்ரோ பஸ் சேவையை நிறுவுவதற்காக அரசாங்கம் சுமார் 7.5 பில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளதுடன், இது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வு என்றும் அமைச்சர் வர்ணித்தார். 

பொதுப் போக்குவரத்தை நவீனமயப்படுத்துவதற்காக 100 தாழ்தள சொகுசு பஸ்களைக் கொள்வனவு செய்ய 3 பில்லியன் ரூபாயை ஒதுக்கிய 2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட முன்மொழிவின் தொடர்ச்சியாகவே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட 122 பஸ்களில் 104 பஸ்கள் இலங்கையால் கொள்வனவு செய்யப்பட்டவை என்பதுடன், 08 பஸ்கள் ஜப்பான் அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவையாகும்.

ஆரம்ப கட்டமாக சுமார் 188.7 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய 07 பிரதான வழித்தடங்களில் இந்த மெட்ரோ பஸ் வலையமைப்பு செயற்படவுள்ளது. கொழும்புக்குள் நுழையும் தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதே இதன் பிரதான இலக்காகும். இதற்கிடையே, பஸ் பேருந்துத் தொகுதியை நிர்வகித்தல், பயணிகளுக்கான தகவல் கட்டமைப்பு, கட்டண அறவீடு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான டிஜிட்டல் முறைமையின் வடிவமைப்பு நிறைவடைந்து தற்போது அதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ பஸ் பணிமனைகளுக்கான திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகார சபையும் கொழும்பு மாநகர சபையும் இணைந்து பஸ் தரிப்பிட வசதிகளை நவீனமயப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் உள்ள ஏனைய முக்கிய நகரங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவை படிப்படியாக விஸ்தரிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Related posts

கலஹாவில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

Lankasudar

விதிமீறினால் புள்ளிகள் குறையும்; சாரதிகளுக்கு எச்சரிக்கை

Lankasudar

இலங்கையில் நாள்தோறும் 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம்: மூவர் உயிரிழப்பதாக விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Lankasudar

கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் 17 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

Lankasudar

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு

Lankasudar

புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்

Lankasudar

Leave a Comment