தரம் 12 மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சை, 2027ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் ஒரு பகுதியாக, எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள 1,520 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே பாடசாலை அதிபர்கள் மற்றும் தனியார் பாடசாலைத் தலைவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பரீட்சார்த்திகள் தங்களது அனுமதி அட்டைகளை www.doenets.lk என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, அனுமதி அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பரீட்சை மொழிமூலம் மற்றும் பாலினம் (ஆண்/பெண்) ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டோபர் 19ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த திருத்தங்களுக்கான கால அவகாசம், ஒக்டோபர் 21ஆம் திகதி மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்கள் அல்லது சந்தேகங்களுக்கு 1911 என்ற நேரடி அழைப்பு இலக்கம், 0112784208 மற்றும் 0112784537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள், 0112784422 என்ற தொலைநகல் இலக்கம் அல்லது gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்புகொண்டு விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
