நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக வழங்கப்படும் தீர்ப்பே நீதி தொடர்பான சரியான முடிவாகும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அந்தத் தீர்ப்புக்கு நாம் கட்டுப்படுவோம். அதற்கு அப்பால் எம்மிடம் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பதுளையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்றும், இந்த விடயத்தில் தமது அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியவர்களும், சட்டம் தங்களை நெருங்காது எனக் கருதியவர்களுமே தற்போது சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு எதிராகக் குரல் எழுப்புகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் சரோஜா போல்ராஜ், கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் உழைக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் எனத் தமது தரப்பு உறுதியளித்ததாகவும், அதற்கமைய அவர்களுக்கான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
கடந்தகால ஆட்சியாளர்கள் 10 ரூபாவைக்கூட சம்பள அதிகரிப்பாக வழங்காத நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தச் சம்பளமாக 1,750 ரூபாவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இம்முறையும் 15 இலட்சம் மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவாக 6,000 ரூபா வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மக்கள் அரசியல் அலையைக் கருத்திற்கொண்டு வாக்களிக்கவில்லை என்றும், சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தமது தரப்புக்கு வாக்களித்ததாகவும் குறிப்பிட்டார்.
எதிரணியினர் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும், தனிநபர்களைக் குறிவைத்துச் சேறு பூசினாலும் உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரியும் என அவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட ரீதியில் தங்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டை மீட்டெடுப்பதற்காகவே இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும், அந்தப் பயணத்தில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் சரோஜா போல்ராஜ் மேலும் தெரிவித்தார்.

