சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற அலுவல்களைத் தீர்மானிப்பதற்காக, நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு இன்று (16) நாடாளுமன்ற வளாகத்தில் கூடியது.
இதன்போது, குறித்த பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு ஆளும் கட்சி யோசனை முன்வைத்தது. எனினும், சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில் 50 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அவற்றை விவாதிப்பதற்கு ஒரு நாள் போதுமானதாக இருக்காது என எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களில் தொழில்நுட்பச் சிக்கல்கள் காணப்படுவதால், அவை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியுள்ளதாக ஆளும் கட்சி தெரிவித்தது.
இதற்கான ஆலோசனையைப் பெறுவதற்குச் சிறிது காலம் தேவைப்படுவதால், எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் பிரேரணை மீதான விவாதத்தை நடத்த முடியாது என நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னரே, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதி தீர்மானிக்கப்படும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

