உள்ளக விளையாட்டரங்கை அமைக்கும் விவகாரம் தொடர்பில், ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 14.10.2026 அன்று நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்விகளை எழுப்பினார்.
“விளையாட்டரங்கு அமைக்கும் பணிகள் தற்போது எந்தக் கட்டத்தில் உள்ளன? இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை என்ன செய்யப் போகின்றீர்கள்?” என அவர் வினவினார்.
இதன்போது குறுக்கிட்ட ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், விளையாட்டரங்கிற்கான இடத்தைத் தெரிவு செய்தது யார் என்றும், அதற்கான அனுமதியை வழங்கியது யார் என்றும் கேள்விகளை முன்வைத்தார்.
கூட்டத்தில் காரசாரமான விவாதம்
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், “விளங்காமல் பேசக் கூடாது. கொஞ்சம் இருங்கள் தம்பி, நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று உரத்த தொனியில் தெரிவித்தார்.
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா, க. இளங்குமரன் மற்றும் ஜெ. ரஜீவன் ஆகியோர் மாறி மாறிக் குறுக்கிட்டு, திட்டத்திற்கான முறையான அனுமதிகள் பெறப்பட்டனவா என்றும், ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பினர்.
நீதிமன்ற இடைக்காலத் தடையால் தொடரும் சர்ச்சை
குறித்த உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்காக ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டிருந்த நிலையில், அதற்கான கட்டுமானப் பணிகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில், விளையாட்டரங்கு அமைக்கும் திட்டம் தொடர்பாக ஆளுங்கட்சியின் உறுப்பினர்களிடையே நிலவும் கருத்து முரண்பாடுகள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது வெளிப்பட்டுள்ளன.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து விவாதிப்பதைத் தவிர்த்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அடுத்தடுத்த நிகழ்ச்சி நிரல்களைக் கையிலெடுத்து கூட்டத்தைத் தொடர்ந்து நடத்திச் சென்றார்.
