November 8, 2026
இலங்கை

ஹொரனையில் புதிய ஆலை

இலங்கையில் மருந்து உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், ஹொரனை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் புதிய மருந்து உற்பத்தித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தியாவின் மருந்து உற்பத்தி மற்றும் உயிரியல் அறிவியல் துறையில் முன்னணி நிறுவனமான சைடஸ் லைஃப்சயின்சஸ் லிமிடெட் மற்றும் இலங்கையின் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் கீழ் இயங்கும் சன்ஷைன் ஹெல்த்கேர் ஆகியவற்றின் கூட்டாண்மையில் உருவாக்கப்பட்டுள்ள ‘சைடஸ் சன்ஷைன் லைஃப்சயின்சஸ் தனியார் நிறுவனம்’ இந்த முதலீட்டுத் திட்டத்திற்காக இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், வர்த்தக ரீதியிலான மருந்து உற்பத்தி நடவடிக்கைகள் 2028ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பக் கட்டத்தில், இலங்கைச் சந்தைக்குத் தேவையான மாத்திரைகள் மற்றும் வாய்வழியாக உட்கொள்ளும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தரமான மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரித்து, நோயாளிகள் அவற்றை குறைந்த செலவில் இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.

அதேவேளை, வெளிநாடுகளிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதில் இலங்கை கொண்டுள்ள சார்புநிலையைக் குறைப்பதற்கும் இந்தத் திட்டம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சைடஸ் நிறுவனம், உலகளவில் 30,000 ஊழியர்களையும் 1,500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி விஞ்ஞானிகளையும் கொண்டுள்ளது. மறுபுறம், சன்ஷைன் ஹெல்த்கேர் நிறுவனம் இலங்கை முழுவதும் விரிவான விநியோகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து செயற்படுவதன் மூலம், சர்வதேசத் தரத்திலான தொழில்நுட்ப அறிவும் மருந்து உற்பத்தி அனுபவமும் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளன.

மேலும், இந்தத் தொழிற்சாலையின் ஊடாக உருவாக்கப்படும் மொத்த வேலைவாய்ப்புகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ளன. மருந்து உற்பத்தி, தர உறுதிப்பாடு மற்றும் தொழில்நுட்பச் செயற்பாடுகள் உள்ளிட்ட துறைகளில் உள்நாட்டு ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

Related posts

சீரற்ற வானிலை பாதிப்பு

Lankasudar

ஞானசாரர் விவகாரம்: ஜனாதிபதி முடிவு

Lankasudar

ஊவா பரணகமவில் தாய் மாயம்

Lankasudar

மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

Lankasudar

தனியார் பஸ் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Lankasudar

கஸ்ஸப தேரர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றம்

Lankasudar

Leave a Comment