டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, டெங்கு தடுப்பூசி இதுவரை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படாமை குறித்து மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ கவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் குறித்த தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக இன்று (15) வியாழக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அண்மையில் நாட்டில் பரவிய தீவிர டெங்கு அலையின்போது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. இருப்பினும், குறித்த தடுப்பூசியை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள்கூட இதுவரை நிறைவுசெய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தடுப்பூசியின் ஒரு டோஸின் விலை சுமார் 50,000 ரூபாவாகும். இதன்படி, ஒருவர் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொள்வதற்கு தனியார் துறையில் 100,000 ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவிட வேண்டியிருக்கும்.
சிறுவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பதற்காக உலகின் பல நாடுகளில் இத்தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான அனுமதியைக் கோரி, விநியோகஸ்தர்கள் பல ஆண்டுகளாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடம் விண்ணப்பித்து வருகின்றனர். எனினும், அதிகார சபையின் தொடர்ச்சியான தாமதம் காரணமாகத் தனியார் துறையினராலும் இத்தடுப்பூசியை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே, அடுத்த டெங்கு பரவல் அலை ஏற்படுவதற்கு முன்னர் அரச மற்றும் தனியார் சுகாதார சேவைகள் ஊடாகப் பொதுமக்கள் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கும் நடைமுறைகளை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும் என வைத்தியர் சமல் சஞ்சீவ வலியுறுத்தினார்.
