பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ‘முரவத்தே சீப்பு’ என்றழைக்கப்படும் ஒகஸ்டஸ் ரோஷன் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 36 கிராம் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், இலத்திரனியல் தராசு ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின்போது, சந்தேகநபர் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் மொரட்டுவெல்ல பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்குப் போதைப்பொருட்களைக் கொண்டுவந்து, அவற்றைப் பொதியிட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன், மொரட்டுவ மற்றும் கல்கிசை பகுதிகளை இலக்காகக் கொண்டு நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவின் உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்கவின் வழிகாட்டலில் விசேட பொலிஸ் குழுவினர் இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
