November 8, 2026
இலங்கை

மன்னாரில் சட்ட நடவடிக்கை

மன்னார் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், வீதிகளில் பயணிப்போருக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் மீன் வலைகளை உலரவிட்ட நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளில் காணப்பட்ட வலைகளும் அகற்றப்பட்டுள்ளன.

மன்னார் ஜீவபுரம், ஜிம் ரோன் நகர், எமில் நகர், சாந்திபுரம், பனங்கட்டுக்கொட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் சில மீனவர்கள் வீதிகளில் ஆபத்தான முறையில் மீன் வலைகளை உலரவிடுவதால் விபத்துகள் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

குறித்த செயற்பாட்டைக் கைவிடுமாறு மன்னார் நகர சபையால் பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சிலர் அந்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீதிகளில் மீன் வலைகளை உலரவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமன்றி, வலைகளை அகற்றுமாறு அறிவுறுத்தப்படும் போது, “வலைகளை உலர விட வேண்டாம் என்றால் வேறு எங்கே உலர விடுவது?” எனக் கேள்வி எழுப்பி, தமது செயற்பாட்டை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தொழில் தேவைகளைக் காரணம் காட்டிப் பொதுமக்களின் பாதுகாப்பைப் புறக்கணிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வீதிகள் அனைவரும் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கான பொதுவிடங்கள் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், வீதிகளில் கிடக்கும் மீன் வலைகளில் சிக்கி மக்கள் விழும் சம்பவங்களும் மன்னாரில் தொடர்ச்சியாகப் பதிவாகி வருகின்றன. கடந்த ஆண்டு கர்ப்பிணித் தாய் ஒருவர் வலையில் சிக்கி விழுந்ததாகவும், நேற்று சிறுமி ஒருவர் வலையில் சிக்கி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, வீதிகளில் மீன் வலைகளை உலரவிடுவதை உடனடியாக நிறுத்துமாறு மன்னார் நகர சபை அறிவுறுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறு செயற்படுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மருந்து உற்பத்தி விரிவாக்கம்

Lankasudar

டெங்கு தடுப்பூசி தாமதம்

Lankasudar

சிகை நிலையங்களுக்கு கட்டுப்பாடு

Lankasudar

இனவாதம் இன்னமும் ஒழிக்கப்படவில்லை – லால்காந்த

Lankasudar

உத்தியோகத்தரைத் தாக்கியவர் கைது

Lankasudar

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒத்திவைப்பு

Lankasudar

Leave a Comment