கண்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், அடுத்த ஆண்டு முதல் ‘மெட்ரோ நகர்ப்புற ஆடம்பர பஸ் சேவை’ அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் ஆரம்பகட்ட கள ஆய்வின் ஒரு பகுதியாக, 12 மீற்றர் நீளமுடைய மெட்ரோ பஸ்ஸின் சோதனை ஓட்டம் நேற்று வியாழக்கிழமை (15) கண்டி நகரில் முன்னெடுக்கப்பட்டது.
கண்டி நகருக்குள் அதிகளவில் தனியார் வாகனங்கள் நுழைவதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தி, பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதற்காக, நகருக்குள் நுழையும் வாகனங்கள் தொடர்பான தரவுகளும் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன. மெட்ரோ பஸ் சேவைக்கு ஏற்ற வீதிகளைத் தெரிவுசெய்தல், பஸ்களுக்கான தொழில்நுட்பத் தேவைகளைத் தீர்மானித்தல் மற்றும் பயணிகள் ஏறி இறங்குவதற்கான பஸ் நிறுத்தங்களை அடையாளம் காணுதல் ஆகிய நோக்கங்களுடன் இந்தக் கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கண்டி சேனநாயக்க வீதி, தலதா வீதி, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, முல்கம்பல, கெட்டம்பே சந்தி, கலாஹ சந்தி, பேராதனை, அங்குனாவல, கெலிஓய, வெலிகல்ல மற்றும் பொத்தம்பிட்டி ஊடாக கம்பளை வரை பஸ் இயக்கப்பட்டது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த மெட்ரோ பஸ் பாதையின் மொத்த தூரம் 19 கிலோமீற்றர்களாகும்.
கொழும்புக்கு வெளியே கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய முக்கிய நகரங்களில் ஆரம்பகட்டமாக இச்சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 2029ஆம் ஆண்டு வரையிலான விரிவான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகரின் வீதி அமைப்புகளுடன் ஒப்பிடுகையில், கண்டி மற்றும் காலி நகரங்களின் வீதி கட்டமைப்புகள் வேறுபட்டுள்ளன. எனவே, இந்நகரங்களில் இச்சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னர், வீதி கட்டமைப்புகள் தொடர்பில் முன்கூட்டிய ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகிறது.
இந்தச் சோதனை ஓட்டத்திற்கு முன்னதாக, கண்டி மத்திய மாகாண வீதி அமைச்சின் மண்டபத்தில் பிரதி அமைச்சரின் தலைமையில் முக்கிய கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.
இதில், மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, மாகாண வீதி அமைச்சின் செயலாளர் திலீஷா ரூபானி பியதாச, கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க, மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அஜித் பிரியந்த, லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியும் பொறியியலாளருமான பி.எம். பியதிலக்க, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

