கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதில் நுகர்வோர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், விநியோகத் தடங்கல்கள் சுமார் இரண்டு வாரங்களாக நீடிப்பதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கப்பல் வருகையில் ஏற்பட்ட இரண்டு நாள் தாமதமே விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புக்குக் காரணம் என லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவிக்கையில், கடன் பத்திரங்களைத் திறப்பதில் ஏற்பட்ட தாமதம் அல்லது கொடுப்பனவுச் சிக்கல்கள் காரணமாக எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டதாகக் கூறுவது பொருத்தமல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். கப்பல் வருகையில் ஏற்பட்ட இரண்டு நாள் தாமதத்தினாலேயே விநியோகத்தில் தற்காலிகத் தடங்கல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ஓரிரு நாட்களில் நிலைமை சீராகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், வாரத்தின் நடுப்பகுதியில் 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றொரு கப்பல் வருகை தரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் சந்தையில் நெருக்கடியான நிலைமை ஏற்படாது எனத் தெரிவித்த அவர், எரிவாயுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேவேளை, லாப்ஸ் நிறுவனத்தின் விநியோகப் பற்றாக்குறையை ஈடுசெய்வதுடன், தமது நிறுவனத்தின் நிலுவையில் உள்ள தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
