November 2, 2026
இலங்கை

காணி விடுவிப்பில் ஏமாற்றம்

இராணுவத் தேவைகளுக்கு அவசியமற்ற காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்த காணிகள்கூட இதுவரை விடுவிக்கப்படாமை வேதனையளிப்பதாக ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பலாலி பிரதேச மக்களால் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (19) 18ஆவது வாரமாகத் தொடர்ந்த நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் சுமார் 11 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பலாலியில் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, வலி. வடக்கு பிரதேசத்தில் 2,035 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், 1.69 ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பலாலி வீதிக்குக் கிழக்காக 2024ஆம் ஆண்டு ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டபோது, படையினரின் வாகனங்களுக்கான சேவை நிலையம் அமைக்கப்பட்டிருந்த காரணத்தால் விடுவிக்கப்படாமல் எஞ்சியிருந்த சிறிய பகுதி காணியே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தினால் கணிசமான அளவு காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு, தற்போதைய நிலைமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர்கூட, தேசிய பாதுகாப்புக்கு அவசியமற்ற தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், முதற்கட்டமாகப் பலாலி வீதிக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 290 ஏக்கர் காணிகளாவது விடுவிக்கப்படும் எனத் தாங்களும் எதிர்பார்த்ததாக அவர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது, சுமார் 290 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டதுடன், ஆரம்பகட்டப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும், அதற்கிடையில் தேர்தல்கள் இடம்பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத் தேவைகளுக்கு அவசியமற்ற காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்திருந்ததாகவும், ஜனாதிபதியும் அவ்வாறான காணிகள் விடுவிக்கப்படும் எனக் கூறியிருந்ததாகவும் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதனால், குறைந்தபட்சம் 290 ஏக்கர் காணிகளாவது விடுவிக்கப்படும் எனத் தாங்கள் எதிர்பார்த்திருந்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மக்களின் அபிலாசைகளை ஆட்சியாளர்கள் தாமாக முன்வந்து நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியாது என்றும், ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதன் மூலமே அவற்றை அடைந்துகொள்ள முடியும் என்பதைக் கடந்தகால அனுபவங்கள் உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவதன் மூலமே மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என்றும் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஆசிரியர் ஆட்சேர்ப்பில் குறைபாடு

Lankasudar

ஐஸ் வியாபாரம்: ஒருவர் கைது

Lankasudar

திடீர் மின்வெட்டு: ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை

Lankasudar

எரிவாயு விநியோகம் மந்தம்

Lankasudar

மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை: பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட இருவர் ஒரு மணித்தியாலத்துக்குள் கைது

Lankasudar

மடு வீதி விபத்து: பெண் உயிரிழப்பு

Lankasudar

Leave a Comment