போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 85 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை 14 நாட்களுக்கு முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபா பணமும், யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் அமைந்துள்ள 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இருமாடி வீடொன்றும் முடக்கப்பட்டுள்ளன.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் 15 மில்லியன் ரூபா பணத்துடன் ஐந்து பேர் லொறியொன்றுடன் கைது செய்யப்பட்டு, கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்போது, சந்தேகநபர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இருமாடி வீட்டைக் கட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
