November 3, 2026
இலங்கை

பிரகீத் வழக்கு ஒத்திவைப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒன்பது இராணுவப் புலனாய்வாளர்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை (16) மேலதிக குறுக்கு விசாரணைகளுக்காக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் நான்காவது சாட்சியாளரான சுமதி சுரேஷ்குமார் அல்லது முரளி அல்லது தவேந்திரன் என அழைக்கப்படும் நபரிடம் ஒன்பதாவது பிரதிவாதி சார்பில் மேலதிக குறுக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, கடந்த தவணையில் வழங்கிய சாட்சியத்தை உறுதிப்படுத்திய அவர், பிரகீத் எக்னலிகொடவுடன் ஹபரண பகுதியில் உள்ள தோட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாகத் திறந்த நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

கடந்த வாரம் வழங்கிய சாட்சியத்தில், ஹபரண தோட்டத்தில் இரண்டாவது பிரதிவாதியான நாதனுடன் இணைந்து பிரகீத் எக்னலிகொடவைச் சந்தித்ததாகவும், அச்சந்திப்பின்போது அரச தலைவரைக் கொலை செய்வது தொடர்பாக அவருடன் சில கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் சாட்சியாளர் தெரிவித்திருந்தார். இந்த விடயங்கள் தொடர்பாகவும் அவர் மேலதிக விளக்கமளித்தார்.

இதேவேளை, வழக்கின் சாட்சியாளராகப் பெயரிடப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் துவான் சுரேஷ் சலேவும் நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார். அரச தரப்பு சாட்சியாளராகப் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரிடம், இராணுவத்தின் சட்டப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜெயசிங்க சமர்ப்பித்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் எழுப்பப்பட்டன.

எனினும், தன்னிடம் காண்பிக்கப்பட்ட ஆவணம் இராணுவப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள துவான் சுரேஷ் சலே மறுத்தார். அதேவேளை, பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியதை அவர் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், அந்த வாக்குமூலத்தின் பிரதி தனக்கு வழங்கப்படவில்லை எனவும், அதனைப் பார்வையிடாமல் தன்னால் சாட்சியமளிக்க முடியாது எனவும் அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

மேலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ தொலைபேசிகள் தொடர்பாகவும் துவான் சுரேஷ் சலே சாட்சியமளித்தார். இராணுவப் புலனாய்வுப் பிரிவில் தொலைபேசிகளை வழங்குவதற்கு இருவேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கான தொலைபேசிகள் அவர்களது சொந்தப் பெயர்களில் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் திறந்த நீதிமன்றில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Related posts

ஏ.டி.எம். பணத் திருட்டு: உதவி கோரும் பொலிஸார்

Lankasudar

திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

Lankasudar

வவுனியாவில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு

Lankasudar

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 20 ஆண்டு கால EPF/ETF நிலுவைத்தொகை: ரூ. 4,500 மில்லியனை வழங்க நடவடிக்கை

Lankasudar

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு

Lankasudar

மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கிய ஆடை: பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Lankasudar

Leave a Comment