இந்தியாவின் கொல்கத்தா நகரில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்.
திடீரென பெய்த பலத்த மழையிலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் ஒரே நேரத்தில் புகலிடம் தேடியதால் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மழையின்போது வெளியான அறிவிப்பு ஒன்றைத் தொடர்ந்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, மக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு முன்னோக்கி நகர்ந்தபோது பலர் கீழே விழுந்து நெரிசலில் சிக்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஏழு வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களில் இதுவரை ஆறு பேரின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் துயரம் வெளியிட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்தியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மேற்கு வங்க மாநில அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 இலட்சம் இந்திய ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 இந்திய ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் மதத் திருவிழாக்கள் உள்ளிட்ட பெருமளவிலான மக்கள் கூடும் நிகழ்வுகளின்போது, கூட்ட முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக இதுபோன்ற கூட்ட நெரிசல் விபத்துகள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
