18.1 C
London
October 1, 2026
இலங்கைகிழக்கு

இலங்கை மற்றொரு பிரஜையை இழந்துவிடக் கூடாது: சவூதி மரண தண்டனை விவகாரத்தில் பைஸர் முஸ்தபா அவசர அழைப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் அவசர சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார். 

சமூக வலைத்தளப் பதிவு ஒன்றின் மூலம் இஸ்லாத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கைத் தொழிலாளியின் உயிரைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் அவசரமாகவும் சாணக்கியத்துடனும் இராஜதந்திர ரீதியில் தலையிட வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார். 

அம்பாறை நாவிதன்வெளி – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த குறித்த இளைஞனுக்கு 5 வருட சிறைத் தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால்கள் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டின் பின்னர் அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்ற போதிலும், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும் கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தின் ஊடாகவும் விடயங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சு அறிவித்துள்ளது. 

அதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையான சட்டத்தரணி வழங்கிய வாய்மொழித் தகவலின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சவூதி அதிகாரிகளிடமிருந்து உத்தியோகபூர்வ எழுத்துமூலத் தீர்ப்பை தூதரகம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஒரு மாத காலத்திற்குள் சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் என சட்டத்தரணி தெரிவித்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளில் வெளிவிவகார அமைச்சு இறங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதிப்பது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த மனவேதனையைத் தரும் ஒரு செயலாகும் என்பதையும், சவூதி அரேபியாவின் சட்டம் மற்றும் நீதித்துறை இறையாண்மையை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதையும் பைஸர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேநேரம், குறித்த பதிவு சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டு, அதற்காக அனோஜன் பகிரங்க காணொளி மன்னிப்புக் கோரியுள்ளார் என்ற காரணத்தை முன்வைத்து, இஸ்லாத்தின் மன்னிப்பு மற்றும் கருணை ஆகிய உன்னத போதனைகளின் அடிப்படையில் சவூதி அதிகாரிகளிடம் பொதுமன்னிப்புக் கோருவதற்கு வலுவான நியாயங்கள் உள்ளதாக அவர் எடுத்துரைத்துள்ளார்.

கடந்த காலங்களில் றிஸானா நபீக் விடயத்தில் இலங்கை எதிர்கொண்ட கசப்பான வரலாற்றுப் பாடங்களை நினைவுகூர்ந்துள்ள அவர், வெளிநாடுகளில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கைப் பிரஜைகளுக்குச் சட்டப் பிரதிநிதித்துவம், மொழிபெயர்ப்பு வசதிகள் மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே முறையாக வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

கருணை மனுக்கள் மட்டும் போதுமானதல்ல எனவும், வலுவான சட்டப் பாதுகாப்பும் அதனுடன் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

காணி வழங்குவதாகக் கூறி நிதி மோசடி: ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

Lankasudar

மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கிய ஆடை: பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Lankasudar

கொழும்பில் வயோதிபர்களுக்கான முதலாவது பகல்நேர செயற்பாட்டு மையம் ஆரம்பம்

Lankasudar

கலஹாவில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

Lankasudar

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற தனோஜ் தீக்ஷணவுக்கு பாராட்டு

Lankasudar

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுங்கள்: சவுதியிடம் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

Lankasudar

Leave a Comment