November 6, 2026
இலங்கை

பேரினவாதத்தைத் தோற்கடிக்க ஒன்றிணைவு – ரிஷாட் பதியுதீன்

மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுச் சாதனைகளையும், மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் ஆசிரியர் சமூகத்தையும் கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (16) மாலை மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

உப்புக்குளம் மற்றும் மூர்வீதி நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கௌரவ விருந்தினராக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் கலந்துகொண்டார்.

இதன்போது, மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களில் ஏனைய பாடசாலைகளில் கல்வி கற்று சாதனைகள் புரிந்தவர்களும், மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் கல்வி கற்று பல்வேறு துறைகளிலும் சாதனைகள் படைத்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், குறித்த பாடசாலையின் ஆசிரியர் சமூகமும் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சகோதரர் அனோஜன் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

எனவே, எந்தவொரு மதத்தையும் பிறர் நிந்திக்கக் கூடாது என்றும், ஒரு மதத்திற்கு எதிராகப் பேசுவதையோ, மதத்தவர்களின் மனங்களைப் புண்படுத்துவதையோ தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஏனைய மதத்தவர்களையும், இனத்தவர்களையும், மதத் தலைவர்களையும் மதிக்க வேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த அடிப்படையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த நாட்டில் வாழும் தமிழ், சிங்கள சகோதரர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஏனைய மதங்களை நிந்திக்காமலும், அவற்றைப் புண்படுத்தாமலும், பிற மதத்தவர்களுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிக்காமலும் செயற்பட வேண்டும் என்றார். தாம் சார்ந்த மதத்தை எவ்வாறு கௌரவிக்கின்றோமோ, அதேபோன்று ஏனைய மதங்களையும் கௌரவித்து மதித்து நடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நாட்டில் காலங்காலமாக இனவாதமும் மதவாதமும் தலைதூக்கி வருவதாகக் குறிப்பிட்ட ரிஷாட் பதியுதீன், அரசியல்வாதிகளாக இருந்தாலும், தமக்கெனத் தனிப்பட்ட கொள்கைகள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கூட்டமைப்புகள் இருந்தாலும், அனைவருக்கும் மனிதாபிமானம் அவசியம் என்றும், அந்த மனிதாபிமானத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகள் ஒன்றிணைந்து, இந்த நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்குவதற்கோ, பேரினவாதம் மீண்டும் நாட்டை ஆள்வதற்கோ இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். தாம் ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் அல்லது அரசியலில் இல்லாமல் போனாலும், இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், பேரினவாத சக்திகள் நாட்டை ஆட்சி செய்வதற்கும், நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், நீதிமன்றங்களில் தலையிடுவதற்கும், ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துவதற்கும் முயற்சிக்கும் சக்திகளுடன் ஒருபோதும் இணைந்துவிடக் கூடாது என அவர் தெரிவித்தார்.

இத்தகைய சக்திகளுக்கு எதிராகச் செயற்படுவதற்கு இந்த நாட்டில் வாழும் தேசப்பற்றுள்ள பௌத்தர்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் பொருளாதாரம் முன்னேற வேண்டும் என்றும், நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் விரும்புகின்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், இனவாதத்தையும் குறிப்பாகப் பேரினவாதத்தையும் தோற்கடிப்பதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய காலகட்டமாக இன்றைய காலகட்டம் அமைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Related posts

நுவரெலியா தபால் நிலையம் புனரமைப்பு

Lankasudar

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Lankasudar

அஸ்வெசும மோசடி விசாரணை

Lankasudar

ஞானசார தேரருக்கு ஆதரவு

Lankasudar

கொழும்பில் புதிதாக 122 மெட்ரோ பஸ்கள்: யாழ்ப்பாணம், கண்டி, காலி நகரங்களுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை

Lankasudar

அம்பாறையில் இருவர் கைது

Lankasudar

Leave a Comment