lankasudar
இலங்கை

தமிழ் தலைமைகள் திசை மாற்றம். தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியில்?-வீ. ஆனந்தசங்கரி!

தமிழ் மக்கள் இப்போது எதிர் நோக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியவர்கள் திசை மாறி பயணிப்பதால்,

எமது மக்களின் எதிர் காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (02) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியம் பேசுகின்ற ஒவ்வொரு தரப்பும் தம் தம் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும்,

இழந்த இடத்தை மீண்டும் பெறுவதற்கும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உணர்வுகளைத் தூண்டி அவர்களை உணர்ச்சி வசப்படுத்தி,

அதன் மூலம் தங்களின் பதவிகளை தக்கவைப்பதற்கும், இழந்த பதவிகளை மீண்டும் பெறுவதற்கும் முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தமிழ் மக்களை மீண்டும் சொல்லொணாத துன்பத்திற்குள்ளாக்கும் செயற்பாடாகவே அமைந்துள்ளது.

அடிப்படை மனித உரிமை மீறல் பற்றி பேசுபவர்கள் தாங்களும் ஓரளவிற்காவது அவைகளை மீறாமல் செயற்பட்டிருக்க வேண்டும்.

2004ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முற்று முழுதாக ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு,

தேர்தல் நடைமுறைகள் அனைத்தையும் மீறி விடுதலைப்புலிகளால் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத தற்கொலைக்கு சமமான,

தமிழினத்தின் அழிவிற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து 22 பேர் பாராளுமன்றம் சென்றார்கள்.

2004ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை ஒரு குறிப்பிட்ட குழுவினர் நடத்திய ,

படுகொலைகள் அனைத்தையும் இவர்கள் வாய்மூடி மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதிலும் ஒரு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் எமது கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமுமாகிய ,

அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் படுகொலையை நியாயப்படுத்தி பேசி இருந்தார்.

மற்றுமொருவர் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்ட அந்த நேரம் அருகில் உள்ள அறையில் ஒன்றும் தெரியாதது போல் நடித்துக் கொண்டிருந்தார்.

தமிழ் இனத்தின் அழிவிற்கு பல்கலைக்கழக மாணவர்களை எந்த முறையிலும் ஏற்க முடியாத அளவிற்கு உபயோகித்தனர்.

இவ்வாறு அப்பாவி மக்கள் மற்றும் தமிழ்த் தலைவர்களின் படுகொலையை நியாயப்படுத்தியவர்கள்,

அதனை தட்டிக்கேட்காதவர்கள் எவ்வாறு ஜ.நா வில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப்பற்றிப் பேசமுடியும்?

அடுத்ததாக சமஷ;டி என்ற பேச்சுக்கே இடமில்லை என அரசுதரப்பினர் அனைவரும் இன்று வரை கூறிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முண்டு கொடுத்த தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் ,

2015ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டு வரையான நல்லிணக்க ஆட்சிக் காலத்தில் இருந்த ஜனாதிபதி,

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் எற்கனவே கூறிவிட்டார்கள்.

இது நன்கு தெரிந்திருந்தும் சமஷ;டியை பெற்றுக் கொடுப்போம். சமஷ;டிக்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் ,

என்று மாறி மாறி கூறி மக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றப் போகின்றார்கள்? இதனை எவ்வாறு திரு.சம்பந்தன் அவர்கள் நியாயப்படுத்துவார்?

தாயகம், தேசியம், சுயநிர்னயம் போன்ற கோரிக்கைகளும் அவ்வண்ணமே.

2005 ஜனாதிபதி தேர்தலில் சமஷ;டியை முன்வைத்து ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்ட போது அத் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு,

இதே தலைவர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தனர்.

அப்படியிருந்தும் சமஷ;டி கோரிக்கை முன்வைத்து போட்டியிட்டவருக்கு கிடைத்த வாக்குகள் ஏறக்குறைய,

49 வீதமே அதை எதிர்த்து வென்றோருக்கு கிடைத்த வாக்குகள் 50.3 வீதமே என்பது குறிப்பிடத்தக்கது.


அறிவை தாமும் வளர்த்து ஏனையோரின் அறிவையும் வளர்க்க வேண்டிய எதிர்காலத் தலைவர்கள் தான் பல்கலைக்கழக மாணவ சமுதாயம்.

அவர்களை தம் கடமையை செய்ய விடாது 2004ம் ஆண்டு தேர்தலில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க பயன்படுத்திக் கொண்டனர்.

தமிழ் தலைவர்கள் தாமும் தடம் புரண்டு தமிழ் மக்களையும் தடம் புரள வைத்து இலங்கையில் ஆண்டாண்டு காலமாக,

பெருமையுடன் வளர்ந்து வந்த ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து அதிகளவான தமிழ் மக்களின் வாக்குகளை பலாத்காரமாகவும்,

முறை தவறியும் உபயோகித்து தமிழினத்திற்கே அவமானத்தை தேட காரணமாக இருந்தார்கள்.

பல்கலைக்கழகத்தில் கல்விகற்று பெரும் அறிவாளிகளாக எதிர்காலத்தில் உருவாகி எம் மக்களுக்கு சிறந்த சேவை செய்ய வேண்டிய,

அப்பாவி மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறித்து,

அவர்களின் செல்வாக்கை நம் தலைவர்கள் இழக்க செய்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று தொட்டு இன்று வரை வன்முறைகளுக்கு துணைபோகாமல்,

ஜனநாயக ரீதியில் தலைவர்கள் காட்டிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரே கட்சி.

துப்பாக்கி குண்டுகளுக்கும், தற்கொலை குண்டுதாரர்களுக்கும் எமது தலைவர்களையும்,

தொண்டர்களையும் பலி கொடுத்தும் இன்று வரை தளராது துணிவுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எதிர்வரும் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் பேட்டியிட விரும்புபவர்களை எம்முடன் இணைந்து செயற்பட வருமாறு அழைக்கின்றோம்.

தந்தை செல்வா, தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம்,

மலையக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரால் உருவாக்கப்பட்டு,

திட்டமிட்ட சதியால் சீர்குலைந்த தமிழர் விடுதலைக் கூட்டணி,

துரோகங்களை வெளிப்படுத்தி மக்களை உரிய முறையில் வழிநடத்தும் என்பது உறுதி என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related posts

தன்னிச்சையாகா செயற்படும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் – தங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறது வடக்கு சுகாதார திணைக்களம்.

editors

யாழில் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

editors

ஊழல் மோசடி குறித்த விசாரணை அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

editors