அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளைப் பரிமாறி, ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய நபர் ஒருவர் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் சனிக்கிழமை (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌஸுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
சம்பவ தினத்தன்று மாவடிப்பள்ளிப் பகுதியிலிருந்து சாய்ந்தமருது நோக்கி வன் வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளைக் கடத்திச் சென்றபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை வேகமாகப் பரிமாறி, நுணுக்கமான முறையில் இந்தச் சட்டவிரோத வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரைச் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை இன்று (18) சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

